செய்திகள்

ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க முடியாத கோபத்தில் கேமராவை தூக்கி சென்ற மர்ம நபர்கள்

Published On 2018-06-27 10:55 GMT   |   Update On 2018-06-27 10:55 GMT
வடபழனியில் ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்மநபர்களை பணம் எடுக்க முடியாத ஆத்திரத்தில் கேமரா மற்றும் அதில் பதிவாகும் சாதனைகளை தூக்கிச் சென்றனர்.
சென்னை:

சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளதெரு ஆற்காடு சாலையையொட்டி ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த மையத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது. ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை வெளியே எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர்.

நீண்ட நேரமாக அவர்கள் போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.

இன்று காலையில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்திற்கு சென்றபோது கொள்ளையர்கள் பணத்தை எடுக்க முயன்றது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் பகுதி சேதம் அடைந்திருந்தது.

இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். மையத்தை சோதனை செய்தனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏ.டி.எம். எந்திரத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. ஆனால் கொள்ளையர்களால் அதில் இருந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் அங்கு இருந்த கேமரா மற்றும் அதில் பதிவாகும் சாதனங்களை தூக்கி சென்றுள்ளனர். கேமரா மூலம் தங்களின் உருவம் அந்த கருவியில் பதிவாகி விடும் என்பதால் இரண்டையும் திட்டமிட்டு தூக்கி சென்றுள்ளனர்.

இதனால் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தை மீண்டும் பராமரித்து சரி செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும். மேலும் அதில் பதிவாகி இருந்த கைரேகை தடயங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த ஏ.டி.எம். இன்று மூடப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News