செய்திகள்

கட்டணம் செலுத்த தவறிய மாணவனை பள்ளியை விட்டு நீக்கிய தனியார் பள்ளி - கலெக்டரிடம் புகார்

Published On 2018-06-25 12:33 GMT   |   Update On 2018-06-25 12:36 GMT
கல்வி கட்டணம் செலுத்த தவறிய மாணவனுக்கு மாற்று சன்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு நீக்கிய தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை:

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அவரிடம் கோவை கோகுலம் காலனி இந்திரா நகரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒரு மனு அளித்தார்.

நான் கோவை முல்லை நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.

பண கஷ்டம் காரணமாக என்னால் இந்த வருடம் கல்வி கட்டணத்தை மொத்தமாக செலுத்த முடியவில்லை. எனது தந்தை மாத மாதம் கட்டி விடுகிறேன் என கூறினார். ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை ஏற்கவில்லை. எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியை சந்தித்து மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பில் சேர அனுமதி கேட்டோம்.

அவர் பி.என். புதூரில் உள்ள மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேசி அவரை சந்தித்து சேர்ந்து கொள்ளும் படி கூறினார். ஆனால் மாநகராட்சி தலைமை ஆசிரியை என்னை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டார்.

எனது மாற்று சான்றிதழை கொடுத்து அனுப்பிய தனியார் பள்ளி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News