செய்திகள்

கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மோதி வாலிபர் கால் துண்டானது

Published On 2018-06-25 09:14 IST   |   Update On 2018-06-25 09:14:00 IST
சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் மீது மின்சார ரெயில் மோதியதில் அவரது கால் துண்டானது.
சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 3.30 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரெயில் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க ஒரு வாலிபர் முயன்றார்.

இதை கவனித்த ரெயில் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்த முற்பட்டார். ஆனால் ரெயில் அந்த வாலிபர் மீது மோதியது. இதில் அந்த வாலிபர் ரெயிலின் அடியில் சிக்கி வலியில் துடித்தார். வாலிபரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் டிரைவர் மெதுவாக ரெயிலை இயக்கி பின்னால் எடுக்க, அங்கு இருந்த பொதுமக்கள் அவரை வெளியே எடுத்தனர்.

இருப்பினும் அந்த வாலிபரின் கால் துண்டானதுடன் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து டிரைவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார் வாலிபரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய வாலிபரின் பெயர் சதீஷ் (வயது 22) என்பதும், இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருந்து கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News