செய்திகள்

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் - முதல்வர் பழனிசாமி பேட்டி

Published On 2018-06-24 05:40 GMT   |   Update On 2018-06-24 05:40 GMT
சென்னை - சேலம் விரைவு சாலை அமைக்க விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #EdappadiPalaniswami #ChennaiSelamExpressWay
சேலம்:

சென்னை - சேலம் எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை - சேலம் விரைவு சாலைக்கான எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகரிக்கும் போது, சாலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

போராட்டத்தில் ஈடுபடுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாலே கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சேலம் இரும்பாலை தனியார்மயம் ஆவதை பிரதமர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tags:    

Similar News