செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் 10½ டன் மாம்பழம் பறிமுதல்

Published On 2018-06-22 14:41 IST   |   Update On 2018-06-22 14:41:00 IST
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்த 10½ டன் மாம்பழத்தை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போரூர்:

கோயம்பேடு பழ மார்க்கெட்டில் மாம்பழங்கள் எத்திலின் என்கிற ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை 3மணி அளவில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் மார்க்கெட் மேனேஜிங் கமிட்டி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சதாசிவம், மணிமாறன், ஜெபராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் 60-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்ட கடைகளில் எத்திலின் ரசாயனம் மூலம் செயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த கடைகளில் இருந்த 10½ டன் எடை கொண்ட மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்குள் மறைத்து வைத்திருந்த 5 கிலோ எத்திலின் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களின் மதிப்பு சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் கோயம்பேட்டில் உள்ள உணவு கிடங்கிற்கு கொண்டு சென்று அழிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News