செய்திகள்

கரூரை வந்தடைந்தது அமராவதி அணை தண்ணீர்: பொதுமக்கள்-விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2018-06-18 14:38 GMT   |   Update On 2018-06-18 14:38 GMT
அமராவதி அணை தண்ணீர் கரூருக்கு வந்ததால் ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. 90 அடி உயரமும், 4,047 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட இந்த அணையில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 62 அடி நீர் மட்டம் இருந்தது. 
அமராவதி நீரை நம்பி கரூர், திருப்பூர் மாவட்டங் களில் 54 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. குடிநீருக்காகவும், அமராவதி ஆற்றையே மக்கள் சார்ந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து குடிநீருக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி அமராவதி அணையில் இருந்து கடந்த 13-ந்தேதி விநாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

நேற்று முன்தினம் நீர் வெளியேற்றம் 1,700 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு 10 நாட்களுக்கு திறக்கப்படும். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்ட எல்லைப்பகுதியான சின்னதாராபுரம் அருகே உள்ள அணைபுதூர் தடுப்பணையை நேற்று முன்தினம் வந்தடைந்தது. 

பிறகு தடுப்பணையை தாண்டி கரூருக்கு தண்ணீர் வந்தது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை சீராக வாய்ப்புள்ளது. ஆழ் குழாய் கிணறுகளில் நீர் மட்டமும் உயரும் என்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News