செய்திகள்

அடுத்த மாதம் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-06-17 02:04 GMT   |   Update On 2018-06-17 02:04 GMT
அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
காட்பாடி:

வேலூர் வி.ஐ.டி.யில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-


மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை பிரகாசமாக மாற்ற தமிழக அரசு தீவிர முயற்சி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வியின் வளர்ச்சி 14 சதவீதமாக முன்பு இருந்தது. தற்போது 47.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு லட்சம் அரசு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தாண்டு 1,6,9,11-ம் வகுப்புகளின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

அடுத்த வாரம் முதல் 412 மையங்களில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. ‘நீட்’ தேர்வுக்கான 40 சதவீத கேள்விகள் புதிய பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 5,200 அரசுப்பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

பிளஸ்-2 படித்து கொண்டிருக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு தணிக்கை பிரிவில் சேர பயிற்சி கொடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். அதன் மூலம் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அடுத்த மாதம்(ஜூலை) 15-ந்தேதி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவிற்கு பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. ஆசிரியர் பற்றாக்குறை குறித்து தெரிவித்தால் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 படித்து முடித்தவுடன் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என்றார். #MinisterSengottaiyan
Tags:    

Similar News