செய்திகள்

மதுரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க ஒருங்கிணைப்புக்குழு நியமனம்

Published On 2018-06-17 06:42 IST   |   Update On 2018-06-17 06:42:00 IST
துணை வேந்தர் இல்லாத நிலையில் மதுரை பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்காக, ஒருங்கிணைப்புக் குழுவை அந்த பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு நியமித்துள்ளது. #MaduraiUniversity
சென்னை:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பி.பி.செல்லத்துரையை நியமித்தது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு 14-ந்தேதியன்று உத்தரவிட்டது.

மேலும், 3 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேடுதல் குழுவை நியமிப்பதோடு, தகுதியான துணை வேந்தரை நியமிக்கும் நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில், துணை வேந்தர் இல்லாத நிலையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கவனிக்கும் பொறுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில், பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சட்டத்துறை செயலாளர், இந்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருப்பார்.

மேலும் சட்டக்கல்வி இயக்குனர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினராக இருப்பார்கள். புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த குழு மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்படும்.

புதிய தேடுதல் குழுவை நியமிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, தனது தரப்பில் தங்கமுத்துவை தேடுதல் குழுவின் உறுப்பினராக நேற்று கூடிய சிண்டிகேட் குழு நியமித்துள்ளது. தங்கமுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராவார்.

இனி, அரசு தனது தரப்பில் ஒரு உறுப்பினரையும், தமிழக கவர்னர் (பல்கலைக்கழக வேந்தர்) தனது தரப்பில் ஒரு உறுப்பினரையும் நியமித்ததும், மதுரை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு முழுமையாக அமைக்கப்பட்டுவிடும். தேடுதல் குழு பரிந்துரைக்கும் நபர்களில் அதிக தகுதி பெற்ற ஒருவரை கவர்னர் தேர்வு செய்து, துணை வேந்தராக நியமிப்பார்.

இதற்கிடையே, மதுரை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கூட்டமைப்பு, இந்த பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ளது. மேலும், துணை வேந்தர் தேடுதல் குழுவில் தனது தரப்பு உறுப்பினரை அரசு உடனே நியமனம் செய்யவேண்டும் என்று இந்த கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

அதோடு, பல்கலைக்கழக வளாகத்தை விட்டு உடனே வெளியேற பி.பி.செல்லத்துரையை கேட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அரசுக்கு இந்த கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. #MaduraiUniversity
Tags:    

Similar News