செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் விசாரணை நடத்தினார்.

விருத்தாசலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-06-16 11:34 GMT   |   Update On 2018-06-16 11:34 GMT
விருத்தாசலம் அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.பூவனூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது குடும்பத்தினர் நேற்று இரவு வீட்டின் பின்பக்க கதவை பூட்டிவிட்டு முன்பக்க வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மமனிதர்கள் நள்ளிரவில் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையடித்த பொருட்களோடு வெளியே வந்தனர். மீண்டும் அந்த பகுதியில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி பாலகிருஷ்ணன் வீட்டின் அருகே வசிக்கும் வேணுகோபால் என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் 2 வீடுகளிலும் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

2 வீடுகளிலும் கொள்ளைபோனவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். இன்று காலை கண்விழித்து பார்த்த அந்த 2 குடும்பத்தினரும் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. கதவை உடைத்து மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வீடுகளில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
Tags:    

Similar News