செய்திகள்

இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Published On 2018-06-11 22:30 GMT   |   Update On 2018-06-11 22:30 GMT
இந்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ரூ.10,400 கோடி செலவில் 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும், 10 கனரக ராக்கெட்டுகளையும் உருவாக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு இவ்வளவு அதிகமான தொகைக்கு நிதி ஒதுக்கியது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிநவீன இணையதள வசதி கிடைக்கும். விவசாயத்திற்காக சாட்டிலைட் உருவாக்கப்படும். நம் நாட்டில் அன்னிய செலாவணி சேமிக்கப்படும்.

மீனவர்களுக்கு நவீன கருவிகள்

இந்த ராக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள உபகரணங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பணிகள் அதிகமாக கிடைக்கும். ஜி.சாட் 29, ஜி.சாட் 11 ஆகிய செயற்கைகோள்கள் தயாராகி வருகிறது.

இந்த ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும். இதேபோல் தகவல் தொழில்நுட்பத்திற்கான ராக்கெட்டுகளும் தயாராகி இருக்கிறது. மீனவர்களுக்கு தேவையான நவீன கருவிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 500 கருவிகள் கேரள மாநிலத்திற்கும், 200 கருவிகள் தமிழக மீனவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைகாலம் முடிந்ததும் இந்த கருவிகள் மீனவர்களிடம் வழங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News