செய்திகள்

கனமழை எதிரொலி - பவானிசாகர் அணை ஒரே நாளில் 2 அடி உயர்வு

Published On 2018-06-11 08:51 GMT   |   Update On 2018-06-11 08:51 GMT
கனமழை மற்றும் பில்லூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது.
ஈரோடு:

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.

ஊட்டிமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் மலை அடிவாரத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று அணைக்கு வினாடிக்கு 3251 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் ஊட்டி மலையில் உள்ள பில்லூர் அணை நிரம்பியதையொட்டி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாலும் இன்று பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 55.46 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 57.46 அடியாக உயர்ந்து உள்ளது.

கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வருவதையொட்டி அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் பாசனத்துக்கு வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று விவசாயிகள் ஆவலுடன் உள்ளனர்.
Tags:    

Similar News