செய்திகள்
மணப்பாறை அருகே மரம் முறிந்து விழுந்ததில் பலியான ராஜூ, மனோகர்

திருச்சி மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்று- மரம் முறிந்து விழுந்து 2 பேர் நசுங்கி பலி

Published On 2018-06-11 05:18 GMT   |   Update On 2018-06-11 05:18 GMT
மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் முடிந்து பின்பும் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மதிய நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன் லேசான தூரலுடன் மழை பெய்தது. இருப்பினும் பலத்த மழை பெய்யாததால் பொது மக்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள், கம்பங்கள் சாய்ந்தன.

நேற்று 2-வது நாளாகவும் திருச்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சூறைக்காற்று வீசியது. மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை பகுதியில் வீசிய சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தா நத்தம் அருகே உள்ள கம்பளியம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜூ (வயது 43), கனவாய்பட்டியை சேர்ந்த விவசாயி மனோகர் (41) ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கருமலை நோக்கி சென்று கொண்டிருந் தனர்.

மணப்பாறை-துவரங்குறிச்சி சாலையில் புத்தாநத்தத்தை அடுத்த கருஞ்சாலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது.

இதில் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட 2 பேரும் உடல் நசுங்கினர். அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்சு வேனில் அவர்களை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.

தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் சூறைக்காற்று வீசி வருவதில் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News