செய்திகள்

கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது - பன்வாரிலால்

Published On 2018-06-10 03:03 GMT   |   Update On 2018-06-10 03:03 GMT
கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது என்று சென்னையில் நடந்த செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
சென்னை:

செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார்.

செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News