செய்திகள்

நீட் மரணம் - மாணவி பிரதீபா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

Published On 2018-06-06 06:43 GMT   |   Update On 2018-06-06 06:43 GMT
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
சென்னை:

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 39.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். நீட் தேர்வை தமிழில் 24 ஆயிரத்து 720 பேர் எழுதினார்கள். அவ்வாறு தமிழில் தேர்வு எழுதிய விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா மிக குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்டார். மாணவி பிரதீபா பிளஸ்-2 தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண் பெற்று இருந்தார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்காததால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அவருக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தது. கடந்த ஆண்டு பெற்ற 155 மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண் கிடைத்ததால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா மரணம் அடைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது போல இந்த ஆண்டு மாணவி பிரதீபாவின் மரணமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி விஷம் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும்  நீட் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் நேற்று சட்டசபையிலும் எதிரொலித்தது. இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது பேசியபோது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், தேர்வுகளில் தோல்வி அடைந்ததற்காக தற்கொலை போன்ற தவறான முடிவுகளை மாணவர்கள் யாரும் எடுக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். #NeetKillsPradeepa #BanNEET #ReliefPradeepaFamily #TNAssembly
Tags:    

Similar News