செய்திகள்

ஆஸ்பத்திரியில் டீனாக பதவியேற்பவர் ஒரு ஆண்டாவது பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2018-06-05 13:13 GMT   |   Update On 2018-06-05 13:13 GMT
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டீனாக பதவி ஏற்பவர் குறைந்தது ஒரு ஆண்டாவது பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தினர் மனு அளித்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள லூயி பிரெய்லி அரங்கில் நடந்தது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு குமரி மாவட்டம் மட்டும் அல்லாது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். அப்படி இருக்க ஆஸ்பத்திரியில் போர்வை, தலையணை, மெத்தை, கட்டில் போன்ற உபகரணங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன.

மேலும், 2017-ம் ஆண்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டபோது, மாதத்தில் ஏராளமானோர் இறப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளி வந்துள்ளது. கடந்த 25-12-2017 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் ஏ.சி. இயங்கவில்லை. அன்றைய தினம் மட்டும் 4 பேர் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், சிகிச்சைக்கு உள்நோயாளியாக சேர்க்கப்படுபவர்கள் குணம் அடையும் முன்பே நோயாளிகளிடம் கேட்காமலேயே ‘டிஸ்சார்ஜ்’ செய்கிறார்கள்.

இந்த பிரச்சினைகளுக்கு காரணம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் பதவிக்கு வருபவர்கள் பணி ஓய்வுபெறும் தருவாயில் நியமிக்கப்படுவதே ஆகும். இதனால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே டீனாக பதவி ஏற்பவர் குறைந்தது ஒரு ஆண்டாவது பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News