செய்திகள்

கொடைக்கானலில் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2018-06-04 10:08 GMT   |   Update On 2018-06-04 10:08 GMT
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெருமாள்மலை:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த வருடம் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் கட்டணமும் உயர்த்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.

இந்த வருடம் கோடை மழை கைகொடுத்ததால் வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் புதுஅருவிகள் உருவானது காண்பவரை வெகுவாக ஈர்த்தது.

கடந்த 2 நாட்களாகவே நகர்பகுதியில் சாரல்மழை பெய்தது. நேற்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து சாரலாக ஆரம்பித்து கனமழை பெய்தது. இதனால் நகராட்சி நீர்தேக்கம், மனோரஞ்சிதம் உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நகர்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்த மழை தொடர்ந்து பெய்துவரும் பட்சத்தில் விவசாயத்தை நம்பியுள்ள மக்களுக்கு ஏதுவாக இருக்கும். இந்த மழையை நம்பி விவசாயிகள் கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு, முட்டைகோஸ், சவ்சவ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் காய்கறிகள் செழித்து வளரதொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News