செய்திகள்

தூத்துக்குடியில் வெளிமாவட்ட சமூக விரோதிகளை பிடிக்க வேட்டை

Published On 2018-06-02 11:47 IST   |   Update On 2018-06-02 11:47:00 IST
தூத்துக்குடியில் கலவரத்தில் ஈடுபட்ட வெளிமாவட்ட சமூக விரோதிகளை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #ThoothukudiShooting

சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் உள்பட 5 இடங்களில் போலீசாருக்கும், ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் நிகழ்ந்தது.

தீவைப்பு, கல்வீச்சு, வாகனங்கள் உடைப்பு போன்றவை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 13 பேர் பலியானார்கள். சுமார் 140 பேர் காயம் அடைந்தனர்.

இந்த வன்முறையில் சுமார் 100 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 4 நாட்கள் தூத்துக்குடி நகரமே முடங்கிப் போனது.

கலவரம்- தீவைப்பு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 177 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் யார் என்பது பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.

 


இதுபற்றி விசாரிக்க கோரி சுமார் 40 வழக்குகள் கோர்ட்டுகளில் தொடரப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என்பதற்கு தமிழக அரசிடம் ஐகோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளது. மனித உரிமை ஆணையங்களும் விசாரணையை தொடங்கி உள்ளன.

கலவரத்துக்கு வித்திட்டது யார் என்பது பற்றி தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி கலவரத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜனதா தலைவர்களும் கூறி வருகின்றனர். நடிகர் ரஜினியும் இதே கருத்தை வெளியிட்டதால் கலவரத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இதற்கிடையே போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்குள் ஊடுருவிய ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் சதி செய்து திட்டமிட்டு வன்முறையை நடத்தி விட்டு சென்று விட்டனர் என்று தெரிய வந்துள்ளது.

அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் வகையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், தூத்துக்குடியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வன்முறை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த அவர்கள் யார்-யார் என்ற விபரத்தை போலீசார் சேகரித்துள்ளனர். தூத்துக்குடியில் அவர்கள் தங்கி இருக்க உதவி செய்தவர்கள் பற்றியும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலவரத்தை நடத்திய அந்த வெளி மாவட்டக்காரர்களை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை தனிப்படை போலீசார் தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

 


தூத்துக்குடியில் 5 இடங்களில் வன்முறை நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தோம். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான வன்முறை காட்சிகளையும் பல தடவை ஆய்வு செய்தோம். அப்போது சில இளைஞர்கள் மட்டும் தீ வைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பது தெரிந்தது. அந்த இளைஞர்கள் யார்-யார் என்பதையும் கண்டுபிடித்து விட்டோம்.

அவர்களில் ஒருவர் கூட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக கடலூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறை நடந்த சமயத்தில் சிலர் அந்த பகுதியில் இருந்தபடி தீ வைப்புகளை தங்கள் செல்போனில் படம் பிடித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களில் அந்த காட்சிகள் பரவியது. அதில் உள்ள சமூக விரோதிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

வெளி மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் ஊடுருவி மூளைச் சலவை செய்த வெளி மாவட்ட சமூக விரோதிகள் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வர முயற்சி செய்கிறார்கள். எனவே வெளிமாவட்ட சமூக விரோதிகளிடம் இருந்து அப்பாபி கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்.

சமூக விரோதிகளால் இனி தூத்துக்குடியிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் சட்டம்-ஒழுங்கு கெட்டு விடக்கூடாது என்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறாம். இதற்காக வீடு, வீடாக சென்று ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவர்களை ஆதார், ரேசன் கார்டுகள் மூலம் பரிசோதித்து வருகிறோம். இதன் மூலம் சமூக விரோதிகளை விரட்டி வருகிறோம்.

இவ்வாறு அந்த போலீஸ் உயர் அதிகாரி கூறினார். #ThoothukudiShooting

Tags:    

Similar News