செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் - தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தல்

Published On 2018-05-31 21:20 GMT   |   Update On 2018-05-31 21:20 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு, வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. #Sterlite
சென்னை:

பொதுமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த ஆணை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் ஆலை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதற்கு அடுத்த நடவடிக்கையாக ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்காக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 342.22 ஏக்கர் நிலத்துக்கான ஆணையையும் சிப்காட் நிறுவனம் ரத்து செய்தது.

இந்தநிலையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தமிழ்நாடு குழு தலைவர் அரு.ராம.அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனவே அதனால் ஏற்படும் மாசுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சுதந்திரமான நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்.

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் மாசுகள் அப்பகுதியில் இருந்தால், அதனை அகற்றுவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அந்த நிபுணர் குழு உடனடியாக தேவையான ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

ஆலையை மூடினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். இதற்காக உடனடியாக நீடித்த, நிலையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் (சரியான நேரத்தில் ஒப்புதல் வழங்குதல், மாசு கட்டுப்பாட்டு விதிகளில் வெளிப்படைத்தன்மை, உகந்த கட்டுமானம் மற்றும் திறமையான தொழிலாளர் கொள்கைகள்) முற்போக்கான ஆட்சியை வழங்குவது கட்டாயம் ஆகும்.

அதே சமயத்தில் அருகாமையில் உள்ள சமூகங்களை தத்தெடுப்பதோடு, கார்பரேட் துறையையும் ஊக்குவிக்கவேண்டும். ஆர்வங்கள் தேவையற்ற வகையில் செலவிடப்படுவதை விடவும், மாநிலத்தின் உள்ளடங்கிய வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரின் செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sterlite #SterliteProtest
Tags:    

Similar News