செய்திகள்

சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கு: வேல்முருகன் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு

Published On 2018-05-30 06:53 GMT   |   Update On 2018-05-30 06:53 GMT
உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #VelMurugan
விழுப்புரம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி (பொறுப்பு) திருமகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த ஜாமீன்மனு விசாரணையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #VelMurugan
Tags:    

Similar News