செய்திகள்
வெட்டி கடத்தப்பட்ட சந்தன மரங்களை படத்தில் காணலாம்.

கூடலூர் அருகே சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல்

Published On 2018-05-30 04:54 GMT   |   Update On 2018-05-30 04:54 GMT
கூடலூர் அருகே சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 21-வது வார்டுக் குட்பட்டது லோயர்கேம்ப். இங்கு 168 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பெரியாறு நீர்மின்நிலையம் உள்ளது.

இப்பகுதியில் மின் நிலையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் 2 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றனர். இது குறித்து வனத்துறை மற்றும் லோயர்கேம்ப் போலீசில் மின்வாரியத்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பல லட்சம் மதிப்புள்ள சந்தன மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் போலீஸ் மற்றும் வனத்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் இந்த சம்பவங்களால் குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை பிடிக்க வேண்டும். வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், மின்வாரிய குடியிருப்பில் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ளவர்களின் உதவியுடன்தான் சந்தன மரம் வெட்டி கடத்தி இருக்க கூடும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என கூறினர்.

Tags:    

Similar News