செய்திகள்

வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு - வாடிக்கையாளர் அதிர்ச்சி

Published On 2018-05-28 05:22 GMT   |   Update On 2018-05-28 05:22 GMT
வங்கி ஏடிஎம்-ல் அரைகுறையாக அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டு வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Newrupees

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள பாலப்பட்டியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.-ல் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இன்று காலையில் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.5 ஆயிரம் பணம் எடுத்தார்.

அப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 மற்றும் 500 ரூபாய் நோட்டு 1 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் 5 என மொத்தம் ரூ.5 ஆயிரம் ஏ.டி.எம்.-ல் இருந்து வந்தது. இதில் 500 ரூபாய் நோட்டு மட்டும் ஒரு பக்கத்தில் ஓரமாக அச்சடிக்கப்படாமல் இருந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

சரியாக அச்சிடப்படாமல் இருந்ததால் அவர் கள்ள நோட்டாக இருக்குமோ? என சந்தேகம் அடைந்தார். இந்த பணத்தை அங்கிருந்த பொது மக்களிடம் காண்பித்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் பணத்தை மாற்றி தருமா? என கேட்டார். அதற்கு அவர்கள், பணத்தை நேராக வங்கிக்கு கொண்டு சென்று காண்பியுங்கள். அவர்கள் பணத்தை மாற்றி தருவார்கள் என ஆலோசனை கூறினார்கள்.

இதையடுத்து அவர், 500 ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு நேராக சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாடிக்கையாளருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்து உள்ளதால் சரியாக அச்சடிக்கப்படாத 500 ரூபாய் நோட்டை கவனிக்காமல் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்தவர் யார்? என்பதை கண்டுபிடித்து விசாரித்து அவர் மீது தக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Newrupees 

Tags:    

Similar News