செய்திகள்

சொந்த ஊரில் இன்று உடல் அடக்கம்- குரு உடலுக்கு ராமதாஸ், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி

Published On 2018-05-27 05:00 GMT   |   Update On 2018-05-27 05:00 GMT
உடல்நிலை குறைவால் உயிரிழந்த காடுவெட்டி குரு உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடலுக்கு ராமதாஸ், அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் அஞ்சலி செலுத்தினர். #KaduvettiGuru
ஜெயங்கொண்டம்:

பா.ம.க. முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.குரு (வயது 57) நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இதையடுத்து குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குருவின் உடலுக்கு வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க. தொண்டர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் நேற்று காடுவெட்டிக்கு வந்து குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


முன்னதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.பி. பொன்னுச்சாமி, அ.தி.மு.க.வை சேர்ந்த அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராம ஜெயலிங்கம், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காடுவெட்டிக்கு நேரில் சென்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு காடுவெட்டி குரு உடல் இன்று அடக்கம் செய்யப்படும். #KaduvettiGuru #Ramadoss #PonRadhakrishnan
Tags:    

Similar News