செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டைக் கண்டித்து சென்னையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-26 06:43 GMT   |   Update On 2018-05-26 06:43 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் இன்று கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #ThoothukudiFiring #BanSterllite #SterliteProtestChennai
சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் தற்போது தணிந்துள்ள நிலையில், இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



எனினும், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதைக் கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேபோல் நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  #ThoothukudiFiring #BanSterllite #SterliteProtestChennai

Tags:    

Similar News