செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Published On 2018-05-24 23:10 GMT   |   Update On 2018-05-24 23:10 GMT
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் 30 மற்றும் 31-ந்தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சென்னை

வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் தங்களது ஊதியத்தை மாற்றி அமைக்க கோரி 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பண மதிப்பு நீக்கத்தின் போது 2 மாதம் நாள் முழுவதும் இரவு-பகலாக உழைத்தனர். 31 கோடி ஜன்தன் கணக்குகளை தொடங்கியதும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துபவர்களும் இவர்கள் தான். ஆனால் அவர்களின் சம்பளம் மற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள், அதிகாரிகளைவிட குறைவாக உள்ளது.

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பள உயர்வு கடந்த 2017-ம் வருடம் நவம்பர் 1-ந்தேதி முதல் அமல்படுத்தவேண்டியது.

ஊதிய உயர்வுக்கான கோரிக்கை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஒப்பந்தம் நடக்கவில்லை.

பேச்சுவார்த்தையின்போது இந்தியன் வங்கிகள் சம்மேளனம் வழக்கத்திற்கு மாறாக இளநிலை மற்றும் நடுநிலை அதிகாரிகளுக்கு மட்டுமே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் 2 சதவீதம் சம்பள உயர்வே சாத்தியம் எனவும் கூறினார்கள்.

இதனை கண்டித்து உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 9 சங்கங்களின் கூட்டமைப்பான யூனியன் பெடரேஷன் ஆப் பாங்க் யூனியன் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் எப்போதும் போல 7-வது நிலை வரை உள்ள அதிகாரிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார் 
Tags:    

Similar News