செய்திகள்

காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு

Published On 2018-05-23 17:24 IST   |   Update On 2018-05-23 17:24:00 IST
வடவள்ளியில் காதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வடவள்ளி:

கோவை மருதமலை அன்னை இந்திரா காலனியை சேர்ந்தவர் தினேஷ்(வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரூபி (22). காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரூபி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த தினேஷ் நேற்று இரவு 9 மணி அளவில் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடியின் மேல் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார்.

காதல் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தினேசுடன் பேச்சுவார்த்தையில் நடத்தினர். 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தினேஷ் இறங்கி வந்தார்.

இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
Tags:    

Similar News