செய்திகள்

கேரள எல்லைப் பகுதிகளை கண்காணிக்கிறோம் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

Published On 2018-05-22 09:25 GMT   |   Update On 2018-05-22 09:25 GMT
கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காய்ச்சல் தமிழகத்தில் நுழையவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை:

சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணன்  அவர் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வவ்வால் மூலம் பன்றிகளுக்கு பரவி மக்களுக்கும் தொற்றி கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பீதி அடைய தேவையில்லை.

சுகாதார துறை அதிகாரிகளும், டாக்டர்களும் உஷார்படுத்தப்பட்டு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பொது சுகாதார மையங்களிலும் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோழி மூலம் பரவும் பறவை காய்ச்சல் மாதிரி இந்த நோய் இல்லை.

எனவே கேரளாவில் இருந்து வரும் பலா பழங்களை சாப்பிடுவதில் தடை இல்லை. வவ்வால் கடித்த பழங்களை சாப்பிட்டால் தான் நோய் தாக்குவதாக கூறுகிறார்கள்.

எனவே கேரளாவில் இருந்து அவ்வளவு எளிதில் இந்த காய்ச்சல் பரவ வாய்ப்பில்லை. ஆனாலும் நாங்கள் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதார அதரிகாரிகளை உஷார்படுத்தி உள்ளோம்.

கேரள எல்லைப் பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து நோய் பாதிப்புக்குள்ளாகி யாரும் வருகிறார்களா? என்றும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுவரை நிபா நோயால் தமிழகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News