செய்திகள்

ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறை சரிந்து போக்குவரத்து பாதிப்பு

Published On 2018-05-16 15:37 IST   |   Update On 2018-05-16 15:37:00 IST
ஊட்டி மலைப்பாதையில் ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்:

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த சூறாவளியிடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின்கம்பம் மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இந்நிலையில் நேற்று மாலையும் கல்லாறு, பர்லியார், குன்னூர் ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக இன்று அதிகாலை மேட்டுப்பாளையம்- ஊட்டி செல்லும் சாலையில் கல்லாறு, பர்லியார் இடையே உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே மண்சரிவு ஏற்பட்டு சாலையோரத்தில் இருந்த ராட்சத பாறைகள் நடுரோட்டில் உருண்டு விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி வழியே திருப்பூரை சேர்ந்த 6 பேர் ஊட்டிக்கு புறப்பட்டனர். பாறை சரிந்த இடம் அருகே வந்தபோது கார் விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் அங்கு வந்து லேசான காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

காயம் அடைந்தவர்களில் திருப்பூர் மங்கலம் ரோடு 4-வது தெரு சின்சாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்த முத்து ரத்தினம் (36) என்பது மட்டும் தெரியவந்தது. மற்ற 5 பேர் பற்றிய விபரம் உடனே தெரியவில்லை. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News