செய்திகள்
வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளை செய்த 2 பேர் கைது
வில்லியனூர் அருகே குடிபோதையில் ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
மங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு மங்கலம்- உருவையாறு ரோட்டில் ரோந்து பணி சென்றனர். அப்போது 2 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டனர்.
அவர்களை அங்கிருந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்களில் ஒருவர் விழுப்புரம் அருகே அய்யூர் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாகப்பன் (வயது 48) என்பதும், மற்றொருவர் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அம்பேத்கார் (41) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.