செய்திகள்

ஊதிய உயர்வு கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்

Published On 2018-05-11 19:46 GMT   |   Update On 2018-05-11 19:46 GMT
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்ள உள்ளனர். #Bankstrike
சென்னை:

வேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே நவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில் வங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை சமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

பெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது அல்ல. இது கண்டனத்துக்குரியது.

இந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது. இதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும் கலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Bankstrike #BankEmployees #Bank #Strike
Tags:    

Similar News