செய்திகள்

நாமக்கல் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி - விவசாயி கைது

Published On 2018-05-10 16:34 GMT   |   Update On 2018-05-10 16:34 GMT
நாமக்கல் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை மோசடி செய்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள மணிக்கட்டிபுதூரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான 1,204 சதுர அடி நிலத்தை கடந்த 2009-ம் ஆண்டு நடராஜனின் சித்தப்பா பொன்னுசாமி (வயது 70), கூட்டு பட்டாவை வைத்து, போலியாக பட்டா மற்றும் இதர ஆவணங்களை தயார் செய்து, நாமக்கல் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் தூசூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் பெயருக்கு பத்திரபதிவு செய்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதே ஆண்டு தூசூர் பாலசுப்பிரமணியம், அய்யாவு என்பவருக்கு பத்திரத்தை மாற்றி பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு நடராஜன், அவருடைய நிலத்தை வங்கியில் அடகு வைக்க முயற்சித்து, பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரிசீலனை செய்தபோது, அந்த நிலம் பாலசுப்பிரமணியம் மற்றும் அய்யாவு என்பவர்கள் பெயரில் கிரயம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து நடராஜன் மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தார். அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் பத்திரபதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்திரப்பதிவை ரத்து செய்ய அவகாசம் கொடுத்து, இருவருக்கும் நோட்டீசு அனுப்பினர். ஆனால் அவர்கள் ரத்து செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த மோசடி சம்பவம் குறித்து இணை சார்பதிவாளர் பத்மினி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயி பொன்னுசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News