செய்திகள்

பெருந்துறை அருகே இளநீர் கடைக்குள் கார் புகுந்தது - வியாபாரி பலி

Published On 2018-05-09 15:22 IST   |   Update On 2018-05-09 15:22:00 IST
பெருந்துறை அருகே இளநீர் கடைக்குள் கார் புகுந்து வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்த பிச்சாண்டாம் பாளையம் ஊராட்சி, சின்னியம்பாளையம் கிராமம் பகுதியை சேர்ந்தவர் நல்லசிவம் (வயது62) இளநீர் வியாபாரி.

நேற்று மதியம் நல்லசிவம் கடையில் அமர்ந்திருந்த போது அந்த வழியாக சென்னையில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து இளநீர் கடைக்குள் புகுந்தது.

இதில் நல்லசிவம் கார் சக்கரத்தில் சிக்கி சுமார் 20 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நல்லசிசம் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இந்த விபத்தில் ரோட்டின் குறுக்கே நின்ற காரால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிவந்து சியாஜூதீன்(33) மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News