செய்திகள்

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் தொடங்க இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க கடனுதவி

Published On 2018-05-05 19:05 IST   |   Update On 2018-05-05 19:05:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க கடனுதவி வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை:

தமிழக முதல்வர் ஒவ்வொரு இளைஞரையும் தொழில் முனைவோராக உருவாக்குவதற்கு புதிய தொழில் துவங்க, முதல் தலைமுறை இளைஞர்களுக்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை அறிவித்து சிவகங்கை மாவட்டத் தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட ரூ.5 லட்சம் முதல் ஒரு கோடி வரை திட்ட மதிப்பில் வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று தமிழக அரசின் மானியமாக 25% அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் பெறலாம். மேலும் வட்டி மானியமாக வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 3% வட்டி மானியமாகவும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வரையறுக்கப்பட்ட வங்கிகள், காரைக்குடியில் செயல்படும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மற்றும் பாண்டியன் கிராம வங்கிகள் மூலமாகவும் கடனுதவி வழங்கப்படுகிறது.

முதல்வரின் சிறப்புத் திட்டமான இந்த திட்டத்தில் வங்கிகளில் கடனுதவி பெறவும், மின் இணைப்பு பெறவும் மற்றும் பல்வேறு உரிமங்கள் விரைவில் கிடைத்திடவும் வழிவகை செய்யப்படும்.

மகளிர்களுக்கு 50% ஒதுக்கீடும், ஆதி திராவிடர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அரசு மூலம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு முதலில் வரும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி கடனுதவி வழங்கப்படும்.

இந்த திட்டம் குறித்த சிறப்பு வழிகாட்டுதல் கூட்டம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

திட்டத்தின் மூலம் கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில்நுட்பம் பயிற்சி இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 35 வயதுக்குள்ளும் பெண்கள், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஏற்கனவே மத்திய, மாநில அரசின் கீழ் மானியத்துடன் கடன் பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது. விவசாயம், வாகனம், மாசினை ஏற்படுத்தும் தொழில்கள் போன்ற ஒருசில தொழில்கள் தவிர்த்து, உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரத்திற்கு சிவகங்கை மாவட்டத் தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயனடையுமாறு சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். #tamilnews

Similar News