செய்திகள்

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 120 நிறுவனங்கள் மீது வழக்கு

Published On 2018-05-02 17:07 IST   |   Update On 2018-05-02 17:07:00 IST
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 120 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
  1. ஈரோடு:

தொழிலாளர் தினமான நேற்று அனைத்து நிறுவனங்களிலும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவசரம் காரணமாக வேலை செய்யும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது 7 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்குவதற்கான முன்அறிவிப்பு கொடுத்து இருக்க வேண்டும்.

சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம், பொறுப்பு) ஆர்.மாதேஸ்வரன் தலைமையில் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது தொழிலாளர்களுக்கு முறையாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதா? அல்லது பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் கொடுக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தப்பட்டது.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 77 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டதில் 54 நிறுவனங்களிலும், 69 உணவு நிறுவனங்கள் ஆய்வு செய்ததில் 62 நிறுவனங்களிலும், 11 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களிலும் விடுமுறை அளிக்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த 120 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம், உணவு நிறுவனச்சட்டம், மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Similar News