செய்திகள்

காவிரி விவகாரம்: தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வராவிட்டால் டெல்லியில் உண்ணாவிரதம் - அய்யாக்கண்ணு

Published On 2018-05-01 14:56 IST   |   Update On 2018-05-01 14:56:00 IST
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் தொடர்பாக தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வராவிட்டால் டெல்லியில் உண்ணாவிரதம் இருப்போம் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். #Ayyakkannu #Cauveryissue

சத்தியமங்கலம்:

விவசாயத்தில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 100 நாட்கள் விழிப்புணர்வு பயணம் மேற கொண்டு வருகிறார்கள்.

இந்த விழிப்புணர்வு பயணம் இன்று சத்தியமங்கலத்தில் நடந்தது. அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் இதில் கலந்து கொண்டு கடை வீதியில் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு நோட்டீசுகளை கொடுத்தனர்.

அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

கள் உப்பு வேண்டாம் என்று அயோடின் உப்பில் அலுமினிய தூள்களை சேர்த்து விற்கிறார்கள். இதனால் 10 வயதிலேயே பெண் குழந்தைகள் பருவம் அடைந்து வருகிறார்கள்.

பன்றி கொழுப்பை ஜெர்சி மாட்டு பாலுடன் சேர்த்து பிராய்லர் கோழிகளுக்கு செலுத்துவதால் அதை சாப்பிடும் ஆண்களுக்கு ஆன்மை குறைபாடு ஏற்படுகிறது. 100-ல் 10 பேர் இப்படி பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கூடலூர் பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அந்த தண்ணீர் முழுவதும் கர்நாடக அணைகளுக்கு செல்கிறது. 50 முதல் 100 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகாவுக்கு செல்கிறது. ஆனால் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

எனவே ஊட்டியில் இருந்து செல்லும் தண்ணீரை குழாய் மற்றும் தடுப்பு அமைத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக பவானி சாகர் அணைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி இல்லையென்றால் கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் செய்வோம். மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உண்ணாவிரதம் இருப்போம்.

வரும் 3-ந் தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து தீர்ப்பு வர இருக்கிறது. அதில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் டெல்லியில் விவசாயிகளை திரட்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #Ayyakkannu #Cauveryissue

Similar News