செய்திகள்
மயிலாடுதுறையில் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம்.

பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் பெரிய கும்பல் உள்ளது- திருமாவளவன்

Published On 2018-04-19 08:55 GMT   |   Update On 2018-04-19 08:55 GMT
பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் உள்ளது என்று மயிலாடுதுறையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி தனிப்பட்ட முறையில் தவறு செய்ய வாய்ப்பு இல்லை. அவரது பின்னணியில் மிகப்பெரிய கும்பல் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் நிர்மலாதேவி, தொடர்ந்து மாணவிகளிடம் தைரியமாக பேசி உள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம் குறித்து கவர்னர், தனிநபர் ஆணையம் அமைத்துள்ளார். தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் குழப்பம் உள்ளது. இதில் சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.


பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய கவர்னரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் எச்.ராஜா அநாகரீகமாக தொடர்ந்து பேசி வருவது கண்டிக்கத்தக்கது.

காஷ்மீரில் சிறுமி ஆசிபா கொலையை கண்டித்து சென்னையில் வருகிற 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News