செய்திகள்

இந்து கடவுள் குறித்து சர்ச்சை பேச்சு- திராவிடர் கழகத்தினர்-பாஜகவினர் பயங்கர மோதல்

Published On 2018-04-16 12:10 GMT   |   Update On 2018-04-16 12:10 GMT
புதுக்கோட்டை அருகே இந்து கடவுள் குறித்த சர்ச்சை பேச்சால் திராவி டர் கழகத்தினர்-இந்து அமைப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டு மாவடியில் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் ராவணன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சாமி, கடவுள் எதுவும் கிடையாது என்று பேசினர்.

இதையறிந்த கட்டுமாவடி, கணேசபுரம், செம்பியன் மகாதேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க.வினர், இந்து முன்னணியினர் அங்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த திராவிட கழக நிர்வாகிகளிடம், நீங்கள் இந்து கடவுள்களை மட்டுமே விமர்சித்து பேசுகிறீர்கள் என்று கூறி தட்டிக்கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். பதிலுக்கு திராவிடர் கழகத்தினரும் நாற்காலிகளை தூக்கி வீசினர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறியவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசியும் தாக்கி கொண்டனர். திராவிட கழகத்தினருக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு வந்தனர்.

இதனிடையே திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த மோதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கோட்டைப்பட்டினம் போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ், மணமேல்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News