வேதாரண்யத்தில் அறிவிப்பில்லாத மின்தடையால் பொதுமக்கள் அவதி
வேதாரண்யம்:
கோடைக்காலம் துவங்கி கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. காலையிலேயே வெயிலின் உக்கிரத்தால் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் வேதாரண்யத்தில் கடந்த பல நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டாக பலமணி நேரம் மின்சாரம் அவ்வப் போது தடைபடுகிறது. இதனால் நோயாளிகள், வயதானோர்அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் பலமணி நேரம் மின்தடை நிலவுகிறது. இதனால் தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அங்குள்ள தொலைபேசி இயங்குவதில்லை. மீண்டும் மின்சாரம் வந்தபிறகுதான் தொடர்பு கொள்ள முடிகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து சரியான காரணமும் அறிவிப்பதில்லை.
எனவே வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.