செய்திகள்

இழப்பீடு வழங்காத ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி

Published On 2018-04-12 09:40 GMT   |   Update On 2018-04-12 09:40 GMT
விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.
திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள காந்திபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி அனிதா.

இவர்களது மகன்கள் அரவிந்த்குமார், ரோஹித்சரண். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி சாமி கும்பிடுவதற்காக சசிக்குமார் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு காரில் புறப்பட்டார்.

சித்தூர் மாவட்டம், சந்திரகிரியை அடுத்த கொல்லரப்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஆந்திர மாநில அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் சசிக்குமார், அனிதா, மகன்கள் அரவிந்த்குமார், ரோஹித்சரண் மற்றும் சசிக்குமாரின் தம்பி சுரேந்திரகுமார் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சசிக்குமார் உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனையடுத்து சசிக்குமாரின் குடும்பத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 30.1.17-ந் தேதி வழக்கை நீதிபதி விசாரித்து, சசிக்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக 40 லட்சத்து 39 ஆயிரத்து 612 ரூபாய் வழங்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் வெகுநாட்கள் ஆகியும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

அதைத் தொடர்ந்து சசிக்குமாரின் குடும்பத்தினர் வக்கீல் உதயகுமார் மூலமாக கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று நீதிபதி டி.இந்திராணி நிறைவேற்று மனுவை விசாரித்து, சசிக்குமாரின் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.61 லட்சம் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், அந்த மாநில 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, கோர்ட்டு அமீனாகள் திருப்பதி, ஏகாம்பரம் ஆகிய 2 பேரும் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, கோர்ட்டு உத்தரவை ஆந்திர மாநில அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்களிடம் காண்பித்தனர். பின்னர் அங்கு குப்பம் செல்ல நின்று கொண்டிருந்த 2 ஆந்திர மாநில அரசு பஸ்களை ஜப்தி செய்து, திருப்பத்தூர் கோர்ட்டிற்கு எடுத்து வந்தனர்.

இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News