செய்திகள்

தேவகோட்டை அருகே என்ஜினீயரிங் மாணவர் குத்திக்கொலை

Published On 2018-04-08 13:01 GMT   |   Update On 2018-04-08 13:01 GMT
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலையப்பன். இவரது மகன் கருப்பையா (வயது21). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது நண்பர்கள் அடைச்சிவயல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி (21), தேவகோட்டை இறகுசேரி ஸ்ரீராம் (21) ஆகியோருடன் கண்டதேவி ஊரணி பகுதிக்கு சென்று பேசி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு தேவகோட்டை ராம்நகர் ஹவுசிங்போர்டை சேர்ந்த ஆல்பர்ட் மகன் லெவின் சிந்தா (18), தனது நண்பர்களுடன் வந்தார். இவருக்கும் கார்த்திக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.

இந்த விரோதத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது லெவின் சிந்தா, அவர்களது நண்பர்கள் தாணிச்சாஊரணி அசோக்குமார் (21), கண்ட தேவி பிரபாகரன் (21), அரவிந்த் (21), தாழையூர் இந்திரகண்ணன் (21), ஆனையடிவயல் பாலமுருகன் (22) ஆகியோர் சேர்ந்து கார்த்தி உள்பட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். அரவிந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பையா தலையில் குத்தினார்.

இதில் படுகாயம் அடைந்த கருப்பையா சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மாணவர் அசோக்குமார், பிரபாகரன், இந்திர கண்ணன், பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். லெவின் சிந்தா மற்றும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

மோதலுக்கு பெண் தகராறு ஏதும் காரணமாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவர்கள் மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தேவகோட்டை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News