கடலூரில் பஸ்சை மறித்து விடுதலை சிறுத்தையினர் மறியல்- 100 பேர் கைது
கடலூர்:
கடலூர் உழவர்சந்தை அருகே இன்று காலை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமையில், நகர செயலாளர் ராமசாமி, மணிமாறன், சேகர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டனர். பின்பு அவர்கள் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
மஞ்சக்குப்பத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் நாடளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டனர். பின்பு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ்சை மறித்து அதன்மேல் ஏறி கோஷம் எழுப்பினர்.
இதில் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
சி.ஐ.டி.யூ. சார்பில் மஞ்சக்குப்பம் தபால்நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அருகே உள்ள மேல் பட்டாம்பாக்கத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் கூட்டணி கட்சியினர் திரண்டனர். பின்பு அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விடுதலை சிறுத்தைகட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 500 பேரையும் போலீசார் கைது செய்தனர்.