செய்திகள்

நாளை நடக்க இருந்த மருந்து வியாபாரிகள் கடை அடைப்பு ஒத்திவைப்பு: மாநில தலைவர் பேட்டி

Published On 2018-04-01 13:13 IST   |   Update On 2018-04-01 13:13:00 IST
நாளை நடக்க இருந்த மருந்து வியாபாரிகள் கடை அடைப்பு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாநில தலைவர் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கங்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சீபுரம் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ வணிக சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து வரும் ஏப்ரல் 2-ந் தேதி கடை அடைப்பு போராட்டம் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டம் வணிகர்கள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும் அனைத்து கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் கலந்து பேசி கடையடைப்பு போராட்டம் நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா, மண்டல செயலாளர் மூர்த்தி, நிர்வாக செயலாளர் சுந்தரமூர்த்தி,மொத்த வணிக பிரிவு செயலாளர் சத்தியமூர்த்தி கலந்துகொண்டனர்.

Similar News