செய்திகள்

காவிரி பிரச்சினையில் இழைத்த துரோகங்களை மறைக்க முடியாது- அ.தி.மு.க. அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

Published On 2018-03-31 23:44 GMT   |   Update On 2018-03-31 23:44 GMT
உண்ணாவிரத நாடகங்களின் மூலம் காவிரி பிரச்சினையில் இழைத்த துரோகங்களை அ.தி.மு.க. அரசு மறைக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்த கெடு தான் முடிந்திருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியத்தின் தேவை இன்னும் முடிவடையவில்லை. எனவே, மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்த பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக்கொண்டால் போராட்டத்தின் வேகம் இன்னும் தீவிரமாக இருக்கும். தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு அதற்கெல்லாம் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி பிரச்சினைக்காக உண்மையாக போராடாமல் உண்ணாவிரத நாடகங்களின் மூலம் காவிரி பிரச்சினையில் இழைத்த துரோகங்களை அ.தி.மு.க. அரசு மறைக்க முடியாது. இதற்கான தண்டனையை மக்கள் விரைவில் அளிப்பார்கள். அதே நேரத்தில் காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க பா.ம.க. தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்ப்பில் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. காவிரி பிரச்சினை தொடர்பான விஷயத்தில் தமிழகத்திற்கு கர்நாடகம் செய்ய நினைக்கும் துரோகத்தை விட, பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு இழைக்க மத்திய அரசு துடிக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் நாட்டு மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதுவரை கர்நாடக அரசு கூறிவந்த காரணத்தை கர்நாடகத்தின் குரலாக மாறி மத்திய அரசு ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதிலிருந்தே மத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். மத்திய அரசின் மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
Tags:    

Similar News