செய்திகள்

மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதல் மதிப்பெண் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2018-03-30 02:30 GMT   |   Update On 2018-03-30 02:30 GMT
மருத்துவ மேற்படிப்புக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து டாக்டர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மருத்துவ மேற்படிப்பில் சேர தொலைதூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

எந்தெந்த பகுதிகள் தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என்று வகைப்படுத்தி அதற்கு தகுந்தாற்போல் கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களாக பணியாற்றி வரும் பிரவீன் உள்பட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரன், ‘புவியியல் அமைப்பின் அடிப்படையில் மருத்துவ சேவைகள் சென்றடைய இயலாத பகுதிகளையே எளிதில் அணுக முடியாத, தொலைதூர பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அதுபோன்று வகைப்படுத்தவில்லை. இதனால், உண்மையிலேயே எளிதில் அணுக முடியாத, தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, இந்த மனுவுக்கு ஏப்ரல் 2-ந்தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். #doctors #highcourt #tamilnews
Tags:    

Similar News