செய்திகள்

காவிரி விவகாரம் - அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர ஆலோசனை

Published On 2018-03-29 05:33 GMT   |   Update On 2018-03-29 07:51 GMT
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். #CauveryManagementBoard
சென்னை:

தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் கடந்த மாதம் 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், “தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் காவிரியில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகா அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கூறி வருகிறது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 22-ந்தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய தமிழக அரசு, பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் தமிழக குழுவை சந்திக்க பிரதமர் மோடி மறுத்து விட்டார்.

மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் 4 மாநில பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசியது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வி‌ஷயத்தில் மத்திய அரசு எத்தகைய மன நிலையில் இருக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது.

இதன் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முடக்கினார்கள். அதற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வார கால கெடு இன்று (வியாழக்கிழமை) முடிந்தது. எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதையடுத்து தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், முதல்-அமைச்சரின் செயலாளர் சாய்குமார் டெல்லி சென்று மத்திய நீர் வளத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்கள்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டம் 11 மணி வரை நடந்தது.

கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், பி.தங்மணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஆர்.துரைக்கண்ணு பங்கேற்றனர்.

அரசு தலைமை வக்கீல் விஜய்நாராயன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வருவாய்த் துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவிரி விவகாரத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

11 மணிக்கு கூட்டம் முடிந்த பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை புறப்பட்டு சென்றதால் மற்ற அமைச்சர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய அரசு எடுத்துள்ள முடிவை தெரிந்து கொண்டு அடுத்தக்கட்டமாக செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஒன்று சுப்ரீம்கோர்ட்டை அணுக வேண்டும் அல்லது பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும் என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ஒரு ஒரு தகவல் வெளியானது. ஆனால் நேற்று மோடி அப்படி எந்த கூட்டத்தையும் நடத்தவில்லை.

அதற்கு பதில் காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “ஸ்கீம்” என்பதற்கு பொருள் என்ன என்று சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. சனிக் கிழமை இதற்கான மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

கர்நாடகா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநில மக்களின் அதிருப்தியை சம்பாதித்து விடக்கூடாது என்ற தயக்கத்தில் இருக்கும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் “ஸ்கீம்” என்றால் என்ன என்று கேட்டு விட்டு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதில் வேறு ஒரு அமைப்பை உருவாக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

அந்த புதிய அமைப்புக்கு “காவிரி மேற்பார்வை வாரியம்” என்று பெயரிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் தவிர வேறு எந்த ஒரு புதிய அமைப்பையும் ஏற்காது என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. எனவே புதிய அமைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர ஆலோசித்து வருகிறார்கள்.

ஆனால் அது கோர்ட்டு அவமதிப்பு வழக்காக இருக்காது என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது.

31-ந்தேதி (சனிக்கிழமை) மத்திய அரசு கோர்ட்டை நாடும்போது தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இல்லையெனில் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு எந்த வகையில் பதில் அளிக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்த்துவிட்டு பிறகு சட்ட ரீதியாக அணுகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அந்த வழக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைய வழி வகுக்குமா? என்பதில் எந்த உறுதியும் இல்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் என்ன முடிவு வரும் என்பதில் கேள்விக்குறி நீடிக்கிறது. #CauveryManagementBoard
Tags:    

Similar News