நெய்வேலியில் லாரி மோதி பெண் பலி
நெய்வேலி:
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்து செல்வன். இவரது மனைவி சிவகாமி சுந்தரி (வயது 46).
இவர் நேற்று மாலை அதேப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் பணம் கட்டுவதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றார். அங்கு பணம் கட்டிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். 21-வது வட்டத்தில் உள்ள சாலையில் சென்ற போது பின்னால் வந்த லாரி திடீரென சிவகாமி சுந்தரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு என்.எல்.சி. பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்கைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சிவகாமி சுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.