செய்திகள்

தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று கூறுவதா?- திருநாவுக்கரசர் கண்டனம்

Published On 2018-03-28 13:30 IST   |   Update On 2018-03-28 13:30:00 IST
முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக கூறுவதற்கு திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போலீசாரை ரவுடிகள் தாக்குவது, வங்கி கொள்ளை, குழந்தைகள் கடத்தல் என்று பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதுதான் அமைதி பூங்காவுக்கான அடையாளமா?

இதைக் கண்டு மக்கள் வேதனைப்படுகிறார்கள். சிரிக்கிறார்கள். முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இத்தகைய குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு தங்களுக்கு தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை மற்றும் நிர்வாகிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. தங்களுடைய நிலைமை மற்றும் இயலாமையினால் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேச வேண்டும்.

தெலுங்கு தேசம் கட்சியை போல் மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும். அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழ்நாட்டுக்காக போராட முன்வர வேண்டும்.

காவிரி மோண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் அரசுகள் தமிழக மக்களுக்கு அநீதி இழைத்து விட்டதாக அர்த்தம். அதற்காக எதிர்காலத்தில் மக்களிடம் பதில் சொல்ல வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News