செய்திகள்

என்னை நம்பி இருக்கும் கட்சிக்காரர்களுக்காக வாழ்வேன்- சசிகலா உருக்கம்

Published On 2018-03-28 07:05 GMT   |   Update On 2018-03-28 07:05 GMT
துரோகம் செய்பவர்களுக்கு மத்தியில் என்னை நம்பி இருக்கும் கட்சிக்காரர்களுக்காக வாழ்வேன் என்று உறவினர்களிடம் சசிகலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை:

கணவர் நடராஜன் மரணம் அடைந்ததை தொடர்ந்து பெங்களூர் சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தஞ்சை அருளானந்தா நகரில் வசித்து வருகிறார்.

நடராஜனுக்கு சொந்தமான அந்த வீட்டுக்கு இப்போதுதான் முதல் முறையாக சசிகலா சென்றுள்ளார். நடராஜனின் தம்பி ராமச்சந்திரன், அனைத்து அறைகளுக்கும் அழைத்துச் சென்று காட்டியுள்ளார். வீடு முழுக்க நடராஜன் சசிகலா போட்டோக்கள் மாட்டப்பட்டுள்ளன.

நடராஜனின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அஞ்சலி செலுத்தி விட்டு சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது தைரியமாக இருங்கள் என்று கூறியுள்ளார். உடனே சசிகலா, உங்களை போன்றவர்களுக்கும் அவரது மறைவு பெரிய இழப்புதான். நீங்கள் தைரியமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

துரோகிகளுக்கு மத்தியில் ஆளும் கட்சியை உதறிவிட்டு நம் பின்னால் நிற்கும் நம்மை நம்பி வந்தவர்களுக்காக வாழ வேண்டும். அவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் சசிகலா கூறியுள்ளார். வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களையும் பார்த்துவிட்டேன். இனி, எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்யாது என்றும் கூறியுள்ளார். சொந்தங்களை விட நம்மை நம்பி இருக்கும் கட்சியினரே முக்கியம் என்பதில் சசிகலா உறுதியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

பெங்களூர் சிறை வாழ்க்கை குறித்தும் சசிகலாவிடம் உறவினர்கள் கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த அவர் சிறையில் யோகா கற்றுக் கொள்கிறேன். நிறைய எழுதுகிறேன். அனைவரிடமும் நன்றாக பேசுவேன். இதனால் கன்னட மொழியையும் கற்றுக் கொள்ள முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.

அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ஓராண்டுக்கு அசைவ உணவுகளை தவிர்த்துள்ளார். கணவர் இறந்திருப்பதால் இப்போதும் அசைவ உணவுகளை சாப்பிட மறுக்கிறார்.

இந்த நிலையில் வருகிற 30-ந்தேதி நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பழ.நெடுமாறன், நல்லக்கண்ணு, திருமாவளவன், பாரதிராஜா உள்ளிட்டோரை அழைக்கவும் சசிகலா முடிவு செய்துள்ளார். #Tamilnews
Tags:    

Similar News