மது குடிக்க பணம் தராததால் மகள் கழுத்தை அறுத்த தந்தை
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் திருக்காளிமேடு பிராமணர் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி புவனா (23). இவர் காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். புவனாவின் தந்தை பரமசிவமும் அதே மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு 9 மணியளவில் புவனா கடையை மூடுவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை பரமசிவம் கடைக்கு வந்து மதுஅருந்த பணம் கேட்டார். ஆனால் புவனா பணம் தர அப்போது மறுத்துவிட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த பரமசிவம் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் புவனாவின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
ரத்தவெள்ளத்தில் அலறிய புவனாவை அங்கிருந்த வியாபாரிகள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து பரமசிவத்தை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மதுகுடிக்க பணம்தர மறுத்த மகளை, தந்தையே கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.