காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு பாயுடன் வந்து பெண்கள் போராட்டம்
காஞ்சீபுரம்:
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர், திருமங்கலம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இவர்கள் தங்கள் பகுதியில் சாலைவசதி, கழீவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று நீண்ட நாட்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதுபற்றி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மொளச்சூர், திருமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 75-க்கும் மேற்பட்டோர் கையில் பாய் மற்றும் பதாகைகளுடன் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாயை விரித்து அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
இதைத்தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர் முகமதுவிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். #tamilnews