செய்திகள்

தஞ்சாவூர், வேலூர், உள்ளிட்ட 4 நகரங்களில் இந்த ஆண்டுக்குள் விமான சேவை தொடங்கப்படும்

Published On 2018-03-26 09:28 IST   |   Update On 2018-03-26 09:28:00 IST
ஓசூர், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் இந்த ஆண்டுக்குள் விமான சேவை தொடங்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே தெரிவித்தார்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனைய புறப்பாடு பகுதிக்கு, விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரிடையாக காலதாமதம் இன்றி செல்ல ரூ.40 கோடியில் ‘வாக்லேட்டர்’ எனப்படும் அதிநவீன நகரும் நடைபாதை வசதி அமைக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதிக்கான 600 மீட்டர் தூரம் கொண்ட ‘வாக்லேட்டர்’ அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பன்னாட்டு முனையத்துக்கு செல்லும் வகையில் 200 மீட்டர் தூரத்துக்கான ‘வாக்லேட்டர்’ அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்துக்கு செல்லும் ‘வாக்லேட்டர்’ வசதி தயாராகிவிட்டதால் அதை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி தலைமையில் நடந்தது.

புதிய ‘வாக்லேட்டர்’ வசதியை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். இதில் இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே, விமான நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு முனையத்துக்கு செல்லும் ‘வாக்லேட்டர்’ வசதியை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தொடங்கி வைத்து அதில் சென்றபோது எடுத்த படம். அருகில் இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே, சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி உள்ளனர்.


தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ள இந்த ‘வாக்லேட்டர்’ வசதி இன்னும் 10 நாட்களுக்கு பிறகுவிமான பயணிகள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் இந்திய விமான நிலைய ஆணையக செயலாளர் ஆர்.என்.சவ்பே, நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.40 கோடி செலவில் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு இடையே பயணிகள் சிரமமின்றி செல்ல ‘வாக்லேட்டர்’ வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

ஜூன் மாதத்துக்குள் ஓசூர் விமான நிலையம் தொடங்கப்படும். அதுபோல் தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த ஆண்டுக்குள் விமான சேவை தொடங்கப்படும். ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிலங்களை வழங்கினால் விமான நிலையம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

Similar News